கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையில் நரேந்திர மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, மோடி வாகன பேரணி நடத்தும் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று விமான மூலம் கோவை வரும் மோடி, விமான நிலையத்தில் இருந்து சாய்பாபா கோயில் சந்திப்பு வரை காரில் செல்லும் பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அதேபோல, அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சாய்பாபா கோயில் சந்திப்பிலிருந்து, ஆர்.எஸ்.புரம் வரை ரோட் ஷோவில் மோடி கலந்து கொள்கிறார். இதனிடையே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அப்பகுதி ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள், தமிழ்நாடு காவல்துறை வாகனங்களும் அணிவகுத்து சென்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்காக சாலையோரம் இருந்த மரங்களில் காய்ந்த கிளைகள், அகற்றும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சிக்காக கோவை மாநகரில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவையில் மோடி ரோட் ஷோ நடக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்த கோவை மாநகர காவல்துறை, "பிரதமர் நிகழ்வு நடைபெற திட்டமிடப்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி, வடகோவை, கங்கா மருத்துவமனை உட்பட பல்வேறு முக்கிய பகுதிகள் உள்ளன.
பள்ளி, கல்லூரி செல்லும் மாண மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள், சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் எனப் பலர், இந்த பகுதியில் இருக்கும் சாலையைக் கடக்க முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படும். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் கூட சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்படும்" என கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறை அனுமதிக்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'கோவையில் பிரதமர் மோடியின் ரோட் ஷோ மாலையில் நடப்பதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாது எனக் கூறி, ரோட் ஷோவிற்கு அனுமதி வழங்கி' நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வாகன பேரணிக்கு அனுமதி அளித்தது ஏன் - நீதிபதி விளக்கம்!