ஈரோடு: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து நேற்று(வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசுகையில், "ஈரோட்டில் நான் பிரச்சாரத்தைத் தொடங்க இரண்டு காரணங்கள் உண்டு. பெரியார் முதல் காரணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது நீங்கள் காட்டிய அன்பு இரண்டாவது காரணம்.
தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே? என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, தமிழ்நாட்டின் வியூகம். மதிய உணவு திட்டம் காமராஜர் தொடங்கி எம்ஜிஆர் மற்றும் அதன் நீச்சியாக முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி வருகிறார்.
நாம் (தமிழகம்) ஒரு ரூபாய் வரி கொடுத்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது. ஆனால், இங்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் மாநிலங்கள், ஒரு ரூபாய் கொடுத்தால் ஏழு ரூபாய் கிடைக்கிறது. அப்படிக் கொடுத்தும் அவர்கள் இங்கு வேலை தேடி வருகின்றனர்.
வடமாநிலங்களில் கட்டபொம்மன், வஉசி சிதம்பரம், காமராஜர் பெயர் உள்ளதா? ஆனால் தமிழகத்தில் காந்தி, பட்டேல் என்று சொன்னால் தெரியும். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்போதே படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம்.
தமிழன் தேசிய நீர் ஓட்டத்தில் கலக்க மாட்டேன் என்பது பொய்"என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,"எப்படியாவது இந்த நாட்டை பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் வெறி. நாடு காப்பது என்பது வீரம். ஆனால், பத்திரிகையாளரையே சந்திக்க பயப்படும் ஒருவரிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பிரயோஜனம்? உண்மை எனும்போது தைரியமாக, பயப்படாமல் சொல்ல வேண்டும்.
ஆங்கிலேயர்கள் கிழக்கு இந்திய கம்பெனியை விரட்டி விட்டோம் என்று நினைத்தோம்.ஆனால் அதை மாற்றி மேற்கு இந்தியாவில் இருந்து தற்போது ஒரு கம்பெனி வந்துள்ளது அது காந்தியர் பிறந்த ஊரிலிருந்து வந்துள்ளது. இந்தி திணிப்பு நான் சிறுவயதில் ஒழித்து விட்டார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இங்கு நடப்பதே வேறு மாணவர்கள் எழுத முடியாத அளவில் தேர்வு கொண்டு வந்து இந்தி திணிப்பு செய்கிறது. உலகத்திலேயே பெட்ரோல் விலை குறைந்தபோது, அதை இந்திய மக்களுக்கு இந்த அரசு லாபத்தில் விற்றதை மறந்து விடாதீர்கள். அரசியலும் மதமும் கலந்தால் நாடு உருப்படாமல் போய்விடும் என்பதற்கு ஐரோப்பா கண்டம் பெரிய உதாரணம்.
கொடுக்கவேண்டிய பாக்கியை கேட்டால் கொடுத்ததே பிச்சை என்று மத்திய அரசு சொல்லுகிறார்கள். தமிழர்கள் பிடிக்கும் சொல்லும் பிரதமர்.இலங்கையில் ஈழத்தைப் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களுக்கு சிஏஏ இடம் இல்லை எனக் கூறுவது ஓர வஞ்சனை.
நாடு பிடிப்பதை வேலையாக வைத்துக் கொண்டு இருப்பவர்கள் இவர்கள். அப்படியே எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் கூட குதிரை வியாபாரம் பேசும் கொள்கை உடையவர்கள். அனைத்து ஜாதினரும் அர்ச்சகர்கள் ஆகும் அரசு வேண்டுமா? அல்லது இந்திய ஜனாதிபதியே ஆனாலும் அர்ச்சனை செய்யும் போது வெளியில் நிற்கச் சொல்லும் அரசு வேண்டுமா? என்பதை சிந்தித்து வாக்களியுங்கள் என்றார்.
இதையும் படிங்க: '10 லட்சம் மக்களின் பட்டாசு தொழிலை நசுக்கியவர் மோடி' - அமைச்சர் தங்கம் தென்னரசு