கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க மகளிர் பிரதிநிதிகள் மாநாடு, வடக்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே, இந்த மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. அதில் மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி மத்திய அரசு கொடுத்திருக்கிறது என்பதை இந்த அரசு வெளிப்படையான அறிக்கையை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.
கிராமப்புறங்களில் இருக்கின்ற விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படுகிறது. முத்ரா திட்டத்தில் அதிகமாக கடன் பெற்று இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள்தான். ரேஷன் கடைகளிலே இலவசமாக அரிசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதைப் பற்றி எல்லாம் பேச மாட்டேன் என்கிறார்கள்.
பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. சட்டப்பேரவையில் நான் பேசுகின்றபோது, வாடல் நோயால் தென்னைகள் பாதிக்கப்பட்டு, பல இடங்களில் விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டும் அவலம் நடந்து வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, தென்னை விவசாயம் இன்று லாபகரமாக இல்லை. ஆகவே, தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். அன்று, எதிர்கட்சித் தலைவராக இருந்தவர் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஆனால் இன்று முதல்வரானதும் அதை பற்றி பரிசீலிக்கவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான ஒரு மனநிலை, மக்களுக்கு இப்போது வந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது ஒரு பலமிக்க கூட்டணியாக இங்கு அமையும், அதன் வாயிலாக 2024-இல் மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்கின்றபோது, தமிழ்நாட்டில் இருந்தும் கணிசமான அளவில் எம்.பிக்கள் பா.ஜ.க சார்பில் இருப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் கவனத்தை ஈர்க்கும் நெதர்லாந்து துலிப் பூக்கள்.. மலர் கண்காட்சியை காண குவியும் மக்கள்!