ஈரோடு: நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது பவானிசாகர் அணைக்கட்டிலிருந்து விவசாயத்துக்கு வண்டல் மண் எடுக்க காலதாமதமின்றி அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவுக்கு பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி வலியுறுத்தியுள்ளார்.
பவானிசாகர் அணைப்பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயத்துக்கு எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவுக்கு பவானிசாகர் எம்எல்ஏ ஏ.பண்ணாரி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில், "ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு முக்கிய நீர்வரத்தாக மேட்டுப்பாளையம் பவானி ஆறும், மாயாறும் உள்ளது.
இந்தாண்டு நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை பொய்த்துவிட்டதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்து விட்டது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 45 அடியாக சரிந்துவிட்டது. இதனால் இரண்டாம் போக பாசதனத்துக்கு தண்ணீர் திறப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் சரிந்ததால் பவானிசாகர் வனத்தையொட்டியுள்ள பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி திட்டு திட்டாக மலைக்குன்று போல காட்சியளிக்கிறது.
நீர்வழிப்பாதையில் குளம், குட்டை போல தண்ணீர் சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது அணை நீர்மட்டம் 45 அடியாக சரிந்ததால் அணைக்குள் இருந்த டணாய்க்கன் கோட்டை வெளியே தெரிகிறது. மணல்மேடு, சித்தன்குட்டை, பூதிகுப்பை போன்ற அணைப்பகுதியில் வண்டல் படிந்து காணப்படுகிறது.
எனவே, அணையில் நீர்மட்டம் குறைந்த காலங்களில் அணையில் தேங்கியிருக்கும் வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களில் உரமாக இடுவது வழக்கம். ரசாயன கலவையின்றி சத்து மிக்க இயற்யையான உரம் என்பதால் விவசாயிகள் அதிக மகசூல் பெற இந்த வண்டல் உதவுவதுடன் விவசாயத்தை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.
வண்டல் மண்ணை அள்ளுவதின் மூலம் அதிகமான நீரை தேக்கி வைத்து, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும். விவசாயப் பயன்பாட்டிற்காக டப்பர் லாரி மூலம் இலவசமாக வண்டல் அள்ளுவது மாவட்ட நிர்வாகம் அனுமயளிக்க வேண்டும், காலதாமதமானால் மழை பெய்து நீர் வரத்து வந்துவிடும் என்பதால் உடனடியாக அனுமதி வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்திருந்த டீசல் படகில் நீர்ப்பிடிப்பு பகுதிக்குச் சென்று வண்டல் மண் படிந்துள்ள இடத்தை பார்வையிட்டார்.
இதையும் படிங்க: பிஸியான சாலையில் திடீரென தீ பற்றிய கார்.. என்ன காரணம்? - Car Fire Accident