சென்னை: வெறுப்பும், பாகுபாடும் தான் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு கொடுக்கும் கேரண்டி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ்(X) பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டும் நச்சுக் கலந்த பேச்சு மிகவும் இழிவானதாக இருப்பதோடு மிகவும் வருத்தத்திற்குரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளை தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியை தவிர்க்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கொடுக்கும் அசலான உத்தரவாதங்கள்" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், "பிரதமரின் இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சை காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமையை கைவிட்டுள்ளது. இந்தியா கூட்டணி வாக்குறுதி அளித்துள்ள சமூக-பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும். அதற்குத் தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் நரேந்திர மோடி.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஆழ்ந்த இரங்கல்"- பி.டி.ஆரின் எக்ஸ் பதிவுக்கு என்ன காரணம்?