திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நான்குமுனை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, நாதக அனைவரும் சூறாவளி பிரச்சாரம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை மதிக்கும் ஒருவர் பிரதமராக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அதற்கு தற்போதைய உதாரணம் மணிப்பூர் மக்கள், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.
மத்திய அரசு மீது வழக்கு தொடருவோம்: பாஜக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் ஒற்றுமையாக வாழும் இந்திய மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் அறிவித்ததும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி, வெள்ளம் வந்தபோது எங்கிருந்தீர்கள்?. 2 இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் வட மற்றும் தென்மாவட்டங்களைத் தாக்கிய நிலையில், ஒரு பைசா கூட வெள்ள நிவாரணமாகத் தரவில்லை. மத்திய அரசிடமிருந்து நிதி வராத நிலையிலும் கூட, மக்களுக்காக உதவி செய்தோம். அனைத்து அமைச்சர்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.
நிதிதான் தரவில்லை என்றால், ஆறுதல் வார்த்தை கூட பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சொல்லவில்லை. வெள்ள பாதிப்புகளைச் சரி செய்ய நிவாரணத் தொகை 37 ஆயிரம் கோடியைத் தொடர்ந்து கேட்டும் தர மத்திய அரசு மறுத்து விட்டனர். வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறோம்.
வெறுப்பைப் பரப்பும் மத்திய அரசு: நிதி தராமல் எத்தனை ஓரவஞ்சனையோடு மத்திய அரசு உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியும் தராமல், மாநில அரசு தரும் நிதியைப் பிச்சை என்கிறார்கள். அதாவது மக்களைப் பிச்சைக்காரர்கள் என அழைக்கிறார்.
அரசு, மக்களுக்குச் செலவு செய்யும் பணம் அனைத்தும் மக்களுக்குரியது, ஆகையால் மக்களுக்குச் செலவு செய்கிறோம். பணத்தைப் பெறுவதற்கான முழு உரிமையும் மக்களுக்கு உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே எப்போதாவது மக்களை நேரடியாகச் சந்தித்து இருக்கிறீர்களா?. மக்களை ஒருமுறை சந்தித்துப் பாருங்கள் பிச்சை என்ற வார்த்தை இனி மனதிலேயே வராது. மத்திய நிதியமைச்சர் தமிழக மக்களை பிச்சைக்காரர் என்கிறார். இன்னொரு மத்திய அமைச்சர் தமிழக மக்களைத் தீவிரவாதி எனச் சொல்கிறார். வெறுப்பு வன்மத்தைப் பரப்பும் அமைச்சர்களாக மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும். பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம். தேர்தலுக்காகத் தமிழ்நாடு வரும் பிரதமர் அவர்களே, தமிழ்நாட்டிற்கென எந்த சிறப்புத் திட்டத்தை கொண்டு வந்தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் என்ன சாதித்தீர்கள். தமிழக மக்கள் கொடுக்கும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா திருப்பிக் கொடுக்கிறீர்களே, அதற்காவது பதில் சொல்வீர்களா அல்லது அதற்கும் வாயால் வடை சுடுவீர்களா?. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, 69 சிறப்பான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
ஆனால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வெறுத்த மோடி போன்ற ஒரு பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை இருந்தது கிடையாது. மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவித்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. அதே மதுரையில் திராவிட மாடல் அரசு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் ஆகியவை அறிவித்து 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி அபத்தமான குற்றச்சாட்டைக் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் சொல்லியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதானது பாஜக ஆட்சியில் தான். 56 இஞ்ச் மார்பு என இருமாப்புடன் சொல்லும் பிரதமர் தமிழக மீனவர்கள் கைதை கண்டிக்க ஏன் தைரியமில்லை. இலங்கையைக் கண்டு பிரதமர் பயப்படுகிறார்?. 10 ஆண்டுக் காலத்தில் பிரதமர் தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை என்பதற்கு அவரே இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறார். தமிழக வரலாற்றிலேயே 2014 - 2024 ஆகிய 10 ஆண்டுகளில் தான் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகம்.
இபிஎஸ் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி: நேருவைத் திட்டுவது,சோனியாவை வசைபாடுவது, ராகுல்காந்தியைக் கண்டு பயப்படாமல் இருப்பது எப்படி எனப் பிரதமர் தினசரி வேலையாக நினைத்துத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தின் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அழிந்துவிடும். ஆனால், எதுகுறித்தும் கவலைப்படாமல் வளைந்த முதுகோடு பாதம் தாங்கி எடப்பாடி பழனிச்சாமி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரதமர் பற்றியும், பாஜக பற்றியும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவார்த்தை கூட பேசவும் இல்லை, பேசுவதற்கும் துப்பில்லை. பாஜகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார். இதுதான் கள்ளக் கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமில்லை அதிமுக தொண்டர்கள் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததைக் கண்டித்து கையெழுத்து இயக்கத்தை நடத்திய போது, திமுகவைப் பார்த்து எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள் என பாஜகவின் டப்பிங் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் எனச் சபதம் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒற்றை விரலால் தமிழக மக்களின் கண்களைக் குத்தியுள்ளார். அவர் எடுத்தது சபதம் அல்ல வெறும் வாய் சவடால். சர்வாதிகார ஆட்சியாளர்களைத் தலைதூக்க விடலாமா?, எப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்து நாம் மீண்டோம் என்பதை மறக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் முதலமைச்சரான போது கொண்டுவந்த திட்டங்களை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி வருகிறது. நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார். பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டிற்கு வைக்கும் வேட்டு. பாஜக - அதிமுக ஆகியோரை ஒரு சேர வீழ்த்துங்கள்" எனத் தெரிவித்தார்.