சென்னை: இந்த தேர்தலில் 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தோல்வி பயத்தில் ஸ்டாலினும் காங்கிரசாரும் உளறிக் கொண்டு இருக்கிறார்கள் என இன்று (மே 23) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோயிலில் ரகசிய அறையின் சாவியை காணவில்லை. ஒடிசாவை நிர்வகிக்கக் கூடிய அதிகாரியை மையமாக வைத்து தான் பிரதமர் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் தவறான தகவலை திரித்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். சாவி தொலைந்து பல ஆண்டுகள் ஆகிறது.
அந்த சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகளை பற்றி தான் பேசி இருக்கிறார். தமிழர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. தமிழர்களுக்கும், தமிழுக்கும் பிரதமர் எந்தளவு மரியாதை தருகிறார் என்பது தெரியும். திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பிரதமர் கூறி உள்ளார். திருக்குறளை 35க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஜ.நா.சபையில் பிரதமர் பேசினார். மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது பொங்கல் விழா கொண்டாடியது உண்டா? ஆனால் டெல்லியில் 2 பொங்கல் விழா, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை பிரதமர் கொண்டாடி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி.
முதலமைச்சர் தவறான தகவலை மக்களிடத்தில் பரப்ப வேண்டாம். இந்தியா கூட்டணி தோல்வி பயத்தில் உளறிக் கொண்டு இருக்கிறது. 5 கட்டமாக நடந்த தேர்தலில் பா.ஜ.க மெஜரிட்டியை தாண்டி உள்ளது. இந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தோல்வி பயத்தில் ஸ்டாலினும், காங்கிரசாரும் உளறிக் கொண்டு இருக்கிறார்கள்”, என அவர் கூறினர்.