சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், தங்களுடைய தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எனப் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்.28) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல், வார் ரூம் செயல்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IMUL) மற்றும் கொமதேக (KMDK) ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாகவும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை கைது செய்யக் கோரி காங்கிரசார் புகார் - என்ன காரணம்?