தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உட்பட்ட மூன்று மாவட்டங்களில் மொத்தம் 560 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழா மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மூன்று மாவட்டத்தின் முத்தான நிகழ்ச்சிகள் இது. மூன்று அமைச்சர்களின் செயல்பாடுகள் இந்த நிகழ்ச்சியில் அடங்கியுள்ளது. இந்த மூன்று அமைச்சர்களும் கட்சி பணியாக இருந்தாலும், ஆட்சி பணியாக இருந்தாலும் சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள். ஔவையார் ஆயுள் வாழ்ந்தால், தமிழ் வளரும் என்பதற்காக, நெல்லிக்கனி கொடுத்த அதியமான் வாழ்ந்த தகடூர் மண்.
தருமபுரி என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது ஒகேனக்கல் தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஜப்பான் நாட்டிற்குச் சென்று 1928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியவுடன் காட்சி மாறியது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போது நானே வந்து போராட்டம் நடத்தினேன். அதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.
ஔவையாருக்கு எப்படி இந்த மண்ணில் பங்கு உண்டோ, அதேபோல் தான் இந்த மக்களுக்காக 1989 ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இது சொன்னதைச் செய்யும் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை வழங்குவோம் என்று சொன்னேன், வழங்கி வருகிறோம். ஒரு சகோதரி மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய், ஸ்டாலின் கொடுத்த சீர் என்று சொன்னார். தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடியின் தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை மக்கள் வெற்று பயணமாகத் தான் பார்க்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இப்போது தான் கட்டுமான பணிகள் தொடங்குவதாக நாடகம் நடத்துகிறார்கள், தேர்தல் முடிந்ததும் நிறுத்தி விடுவார்கள். தேர்தல் வருவதால் சிலிண்டர் விலையைக் குறைத்தது போல அறிவிக்கிறார் பிரதமர். 10 ஆண்டுகளாக 500 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டு இப்போது 100 ரூபாய் மட்டும் குறைக்கிறார்கள்.
இது மோசடி வேலை இல்லையா, இதைவிட மக்களை ஏமாற்றும் செயல் இருக்க முடியுமா. சென்னையில் வெள்ளம் வந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர் மோடி இப்போது மட்டும் அடிக்கடி வர என்ன காரணம். தேர்தல் வரப்போகிறது ஓட்டு கேட்டுத் தான் வருகிறார்கள் என்று மக்களுக்கே தெரியும்.
மக்களின் வளர்ச்சி நிதியை நான் கொள்ளையடிக்க விட மாட்டேன் எனப் பிரதமர் சொல்லி இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு அவர் என்ன வளர்ச்சி நிதி கொடுத்திருக்கிறார். ஜிஎஸ்டி இழப்பீடு 20 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவில்லை, வெள்ள நிவாரணமாகக் கேட்ட 37 ஆயிரம் கோடி தரவில்லை.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒப்புதலும் வழங்கவில்லை, நிதியும் தரவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு முக்கால் பங்கு பணம் தருவது மாநில அரசு. வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு 50 சதவீதத்தை மாநில அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் பிரதமர் தனது ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்கிறார், இதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: 'கண்டா வர சொல்லுங்க' என தருமபுரி எம்.பிக்கு எதிரான போஸ்டர்.. 'நிதியை கையோடு வாங்கி வந்தாருங்க' என ஆதரவாளர்கள் பதில் போஸ்டர்!