சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தருமபுரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி, பாரத ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தது குறித்து பேசியிருந்தார். அதற்கு பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் இன்று பதிலளித்திருந்தார்.
இது தொடர்பாக பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியதாவது, “2004ஆம் ஆண்டில் சமூகநீதிக் கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த அளவு உறுதியுடன் இருந்ததோ, அதே உறுதியுடன் தான் இப்போதும் உள்ளது. நாடாளுமன்றத்தில் அப்போதிருந்த அளவுக்கு வலிமையை இப்போதும் பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
கொள்கை வலிமையையும், அதிகார வலிமையையும் பயன்படுத்தி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்ய பா.ம.கவால் முடியும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தை அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, இக்கோரிக்கையையும் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக் கொள்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியுடன் போராடும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராமதாஸின் விளக்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுகூட்டத்தில் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "பா.ஜ.க எனும் மதவெறிக் கூட்டத்தோடு சேர்ந்திருப்பது யார்? நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் ராமதாஸ் சேர்ந்திருக்கிறார், ஏன் சேர்ந்தார்? எதற்காக சேர்ந்தார் என்று உங்களுக்கும் தெரியும்.
அவர்கள் கட்சிக்காரர்களுக்கும் நன்றாகத் தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த ராமதாஸ், அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று சொல்லும் சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.கவிடம் சரண்டர் ஆகியிருக்கிறார். இதைப் பற்றி நேற்று தருமபுரி கூட்டத்தில் நான் மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறேன்.
அதற்கு விளக்கம் கொடுப்பதாக நினைத்து, ராமதாஸ் இன்றைக்கு என்ன சொல்லியிருக்கிறார்? "பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வலிமையான கட்சியாக இருக்கிறது. அதனால், பா.ஜ.க.வுக்கு அழுத்தம் தந்து சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்" என்று சொல்கிறார்.
ஆனால், பா.ம.க, கடந்த 3 தேர்தலாக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறது. உழவர்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கும், இலங்கைத் தமிழருக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து வாக்களித்த பா.ம.க, ஏன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? அதனால்தான், இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர்களது கட்சிக்காரர்களே மனம் நொந்து, அவமானத்தில் தலைகுனிந்து இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.