விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோயிலில் இன்று (மார்.27) நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “பெருந்தலைவர் காமராசர் அடியொற்றியும், திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு சம்பவம் சொல்லுவார்கள், பெருந்தலைவர் காமராசர் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தாராம். “இன்றைக்குப் பள்ளிக்கு செல்லவில்லையா? என்று கேட்டிருக்கிறார். குடும்பத்தில் உணவுக்கே வழியில்லாததால் எங்கள் அப்பா - அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அந்தச் சிறுவர்கள் சொல்லவும், பள்ளியில் மதிய உணவு அளித்தால் அதற்காகவாவது குழந்தைகளைப் படிக்க அனுப்புவார்கள்” என்று சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார்.
நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள்… காலையில் டிபன் செய்ய மாட்டார்கள். அதனால் சாப்பிடவில்லை” என்று கூறியது முதல், எனக்கு மனதே சரியில்லை. அதிகாரிகளை அழைத்தேன். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள் என்று கூறினேன்.
அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, “சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட கூறவில்லை - என்று கூறினார்கள்” உடனே பதில் கூறினேன். வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன, நம்முடைய எதிர்கால தலைமுறையான குழந்தைகளை காலையில் நன்றாகச் சாப்பிட்டு, நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும், இதை நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் கோப்பினைத் தயார் செய்யுங்கள் என்று உத்தரவிட்டேன். இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 லட்சம் குழந்தைகள் வயிறார உண்ணும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.
பெருந்தலைவர் காமராசரின் ஆட்சி, சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக இருந்தது. சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது, பெரியாரும் - அண்ணாவும் போராட்டம் நடத்தினார்கள். இதை, அன்றைய பிரதமர் நேருவுக்கு எடுத்துக் கூறி, முதல் அரசியல் சட்டத் திருத்தம் உருவாகக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராசர். சட்டமாக உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர். இப்படி பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ.க.”, என பேசியுள்ளார்.