நெல்லை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 'நமது இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது 100% உறுதியாகிவிட்டது. மக்களாகிய நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்; யாருக்கு ஓட்டு போட வேண்டும் என நீங்கள் போடப்போகும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு.
மோடி வெள்ளத்திற்கு வந்தாரா? கரோனாவிற்கு வந்தாரா? வயலுக்கு வந்தாரா? நீட் தேர்வில் 22 குழந்தைகள் இறந்தபோது வந்தாரா? எதுக்கும் வரவில்லை. தமிழகத்தில் தங்கினாலும், பேன்சி டிரஸ் போட்டாலும், மக்கள் ஒரு தொகுதியில் கூட பாஜகவை ஜெயிக்க வைக்க மாட்டார்கள். அதிமுக, மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது என்றும் திருநெல்வேலி ரயில்வே கோட்டம் தனியாக உருவாக்கப்படும், மகளிருக்கு பரிசு தருவதாக கூறிவிட்டு, 800 ரூபாயாக சிலிண்டர் விலையை ஏற்றிவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளார் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'தமிழகத்தின் இலவச பேருந்து திட்டத்தை பக்கத்தில் உள்ள கர்நாடக அரசு பின்பற்றத் தொடங்கியுள்ளது. இதற்கு பெயர்தான், 'திராவிட மாடல்' அரசு. கனடா பிரதமர் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தைப் பார்த்து அங்கும் இதை செயல்படுத்தியது மிகவும் பெருமையானது. 10 ஆண்டு இந்தியாவை ஆண்ட மோடி தமிழகத்திற்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு, ரூ.6,000 கொடுத்தது.
ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தமிழக மக்களுக்கு 'சுயமரியாதை' மிக முக்கியம். நம்முடைய உரிமைகளைப் பறித்தால் சும்மா விடக்கூடாது; எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுவதாக கூறினார்கள். ஆனால், கட்டவில்லை.
'அதிமுக ஆட்சி காலத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து வழக்குப்பதிவு செய்து மிரட்டினார்கள். அதேபோல், எங்களை மிரட்ட முயற்சி செய்கிறார்கள். அதற்கு அஞ்சக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்வரை, நீட் தேர்வு (NEET Exam) தமிழகத்தில் வரவில்லை. ஜெயலலிதா இறந்தப் பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதி தரப்பட்டது. இந்நிலையில் மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்டவைகளை மீட்க வேண்டும் என்றால், அனைவரும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என்று உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை: பஞ்சாப் தேர்தலில் களமிறங்கும் சரப்ஜீத் சிங்! - Lok Sabha Election 2024