திருச்சி: திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 'விளையாட்டில் மறுமலர்ச்சி' என்கிற தலைப்பில் நேற்று (பிப்.7) முதல் பிப்.11ஆம் தேதி வரை சர்வதேச விளையாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கருத்தரங்கின் தலைவருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கருத்தரங்கில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் சாதாரண துறையை முதன்மையான துறையாக்கி இருக்கிறார். விளையாட்டுத் துறையில் எந்த நீட் தேர்வும் இல்லை. திறமை இருந்தால் உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம். விளையாட்டுத் துறைக்குத் தமிழ்நாட்டில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும். அதைத் திருச்சியில் அமைத்துத் தர வேண்டும் என அமைச்சர் உதயநிதிக்கு கோரிக்கை வைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அடுத்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "விளையாட்டுத் துறை வரலாற்றில் முக்கிய தருணத்தில் இருக்கிறோம். விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் வேகமாக நடந்து வருகிறது. விளையாட்டில் பல புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகி வருகிறது. விளையாட்டுத் துறையின் களம் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள், சமூக மாற்றங்கள் ஆகியவற்றால் மாறிக்கொண்டு இயக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப தொலைநோக்கோடும், புதிய சிந்தனையோடும், உறுதியோடும் பயணிக்க வேண்டும். தமிழ்நாட்டை இந்தியத் துணைக் கண்டத்தின் விளையாட்டு தலைநகராக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவையே உலக அளவிலான விளையாட்டு தலைநகராக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம். அதன் வெளிப்பாடாகத் தான் தமிழ்நாட்டில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறோம்.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பிடித்தது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன். விளையாட்டு வீரர்களுக்கு ஒரு துன்பம் என்றால், அவர்களுக்காக உடனடியாக களத்தில் இறங்கி உதவக் கூடிய அரசு தான் தற்போதைய தமிழ்நாடு அரசு.
மணிப்பூரில் கலவரம் நடைபெற்றதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்க முதலமைச்சர் வழிவகை செய்தார். அதில் பயிற்சி பெற்ற இருவர் கேலோ இந்தியா போட்டியில் வெண்கலம் வென்றார்கள். அதற்கு காரணம் தமிழ்நாடு அரசு தான்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் ஃபவுண்டேசன் மூலமாக, இதுவரை சுமார் 100 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.18 கோடி நிதி உதவி அளித்துள்ளோம். எல்லோரையும் போல மாற்றுத்திறனாளி வீரர்களும் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி 5 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது.
அதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து பல திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிய முடிந்தது. விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைத் தமிழ்நாடு படைத்து வரும் நிலையில், இந்த மாநாடு விளையாட்டுத் துறையை மேலும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்பது பெருமையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்த சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுத் துறை நிபுணர்கள் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்தவர் முன்னாள் பிரதமர் நேரு" - பிரதமர் மோடி!