தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “2014க்கு முன் கேஸ் விலை ரூபாய் 450, தற்போது 1,200 ரூபாய், இதற்கு காரணம் மோடி தான். இப்போது உங்களை ஏமாற்றுவதற்கு 100 ரூபாய் குறைப்பேன் என வடை சுட்டு கொண்டிருக்கின்றார்.
சசிகலாவின் காலை வாரிவிட்டவர் இபிஎஸ்: ஆனால், நாங்கல் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம் என்று கூறிய கருணாநிதி வழியில் வந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடர்ந்து சொல்வதை செய்வார். செய்வதை தான் சொல்வார். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கும் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளோம். டேபிளுக்கு அடியில் தவழ்ந்து போய் வெட்கமில்லாத, மானம் இல்லாத பாதம் தாங்கி பழனிசாமி, சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சராகி, கடைசியில் அந்த அம்மாவின் காலை வாரி விட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது கனிமொழி: சசிகலா யார்?, நீயா என்னை முதலமைச்சர் ஆக்கினாய் என்று தற்போது கூறி வருகின்றார். மாநில அரசின் உரிமைகளை பாஜகவுக்கு பயந்து அடகு வைத்து கல்வி, மொழி உரிமையை அடகு வைத்தவர் தான் பாதம் தாங்கி பழனிசாமி, அதை எல்லாம் மீட்டு எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் வந்து எட்டிப் பார்த்தாரா? முழுவதுமாக சட்ட போராட்டம் செய்து ஆலையை மூடியது கனிமொழி கருணாநிதி தான்.
ஓனர்களையும் அடித்து விரட்ட வேண்டும்: அப்போது முதலமைச்சராக இருந்த பாதம் தாங்கி பழனிசாமி எனக்கு தெரியாது டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார். இப்படி ஒரு கேடுகெட்ட ஒரு முதலமைச்சரை துரத்தி அடித்தீர்கள் 2021ல், அதேபோல் அந்த அடிமைகளுடைய ஓனர்களையும் அடித்து விரட்ட வேண்டும். திமுக ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்போம் என்றோம். அதே போல், 3 ரூபாய் குறைத்தோம். ஆவின் பால் லிட்டர் 3 ரூபாய் குறைப்போம் என்றோம், அதையும் குறைத்தோம்.
மகளிருடைய வெற்றி: மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி கொண்டு வருவோம் என்றோம். அதே போல் கொண்டு வந்தோம். மூன்று வருடத்தில் 460 கோடி ரூபாய்க்கு மகளிர்கள் பயணம் செய்து உள்ளீர்கள். இதுதான் திட்டத்தின் வெற்றி. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஆறு கோடி ரூபாய்க்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். இதுதான் மகளிருடைய வெற்றி. ஒரு திட்டத்தை அரசு கொண்டு வருவது முக்கியமல்ல. எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்.
3 ஆயிரம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: பெண்களுக்கு விடுதலை வேண்டும், பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று மூச்சிருக்கும் வரை போராடியவர் தந்தை பெரியார், அவர் வழியில் வந்தவர் தான் அண்ணா, கருணாநிதி. பெண்களுக்கு சொத்துரிமையில் சம உரிமை கொண்டு வந்ததார். கல்வி ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் மட்டும் இந்த வருடம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் ரவி: இது இந்தியாவில் முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பு, சேலத்து இளைஞர் அணி மாநாடு வேலையில் நான் இருந்த போது உடனடியாக என்னை போக சொன்னார். மேலும், 10 அமைச்சர்களை பொறுப்பு அமைச்சராக அனுப்பினார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு மாதங்களாக ஒவ்வொரு வீட்டிற்கும் போய் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஏன் இந்த ஊரை விட்டு வெளியேயே வரவில்லை. எப்போது கேட்டாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறேன் என்றே கூறினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதி வழங்கியது திமுக அரசு, மத்திய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. ஆளுநர் ஆர்.என் ரவி என்ற ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் ரவி, சங்கி ரவி. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. மக்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை.
எய்ம்ஸ் எப்போது வரும்?: முதலமைச்சர் கொடுக்கும் கடிதத்தை பிரதமரிடம் கொடுக்கும் வேலையை மட்டும் தான் ஆளுநர் செய்ய வேண்டும். சட்டமன்றத்திற்கு வரும் போது, டிப் டாப்பாக கோட் சூட் போட்டு சட்டமன்றத்திற்கு வருவார். அவர் எப்போ திரும்ப செல்வார் என யாருக்கும் தெரியாது. அவருக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் ரொம்ப வீக்கு. எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் என்று நான் கேள்வி கேட்கின்றேன். ஆனால் பாதம் தாங்கி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
ஏனென்றால் இரண்டு பேரும் கூட்டு களவாணிகள், ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதியின் 101வது பிறந்த நாள், 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை, நான்காம் தேதி 40க்கு 40 வெற்றி பெற்று கருணாநிதி காலடியில் சமர்பிக்க வேண்டும்” என்றார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோ.. குமரியில் பலத்த பாதுகாப்பு! - Lok Sabha Election 2024