சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
7 முறை பேச்சுவார்த்தை: அப்போது அவர் கூறுகையில், "சாம்சங் நிறுவன தொழிலாளர் பிரச்சினையைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார். 7 முறை தொழிலாளர் துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் உள்ளது.
இந்த போராட்டத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். மூன்று அமைச்சர்கள் சேர்ந்து 10 முதல் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
முதலில், நிறுவனத்திடம் பேசினோம், பின் சிஐடியு மற்றும் அது சார்ந்த நபர்களிடம் பேசி அவர்கள் கருத்துகளைப் பெற்றோம். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களிடமும் பேசினோம். சிஐடியு சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
இந்த சிஐடியு சங்கத்தை பதிவு செய்வது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் எதுவும் செய்ய முடியாது என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த ஒரே ஒரு கோரிக்கைக்காக இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் திருமணமான இளைஞர்கள் பலர் இங்கு பணிபுரிகிறார்கள்.
இதையும் படிங்க: "சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடரும்.. முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு இல்லை.." - சிஐடியு அறிவிப்பு!
அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயார்: 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கூட எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வரை வழங்குகிறார்கள். 5 பேருந்துகள் குளிர்சாதன வசதி உள்ள நிலையில் 108 பேருந்துகளுக்கும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தித் தருவதாக சொல்கிறார்கள். உயர்தர உணவு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
கழிவறைகளையும் சரி செய்து தருவதாக சொல்கிறார்கள். இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும் நிறைவேற்றித் தருவதாகச் சொல்கிறார்கள் நிறுவனத்தை சார்ந்தவர்கள். சிஐடியு சங்கத்தைப் பதிவு செய்யும் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவைப் பொறுத்து அந்த கோரிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்குத் திரும்ப வேண்டும்: மூன்று பொறுப்பு அமைச்சர்களை ஈடுபடுத்தி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்பும் இன்னும் போராட்டத்தைத் தொடர்வது ஏன் என்று தெரியவில்லை. வேலை செய்யாத ஒவ்வொரு நாளும் ஊழியர்களின் குடும்பத்திற்கு ஊதியம் கிடைக்காது.
நீங்கள் ஒவ்வொரு நாள் தாமதப்படுத்த தாமதப்படுத்த ஊதியம் பாதிக்கும். யாருக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு வழங்குவது, இன்னும் அதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என நினைக்கும் முதலமைச்சர் உங்கள் பக்கம் நிற்கிறார். ஊழியர்கள் அனைவரும் தயவு செய்து பணிக்கு திரும்ப வேண்டும்" என வலியுறுத்தினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்