சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகர் 13வது வார்டு பகுதி, அதேபோல் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் 6 வது வார்டு பகுதியில் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததாக 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவர் உயிரிழப்பு
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தியாளர் சுபாஷ் களத்திற்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்படி, கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததாக உடல் உபாதை ஏற்பட்டுள்ள பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், காமராஜர் நகர் பகுதியில் இருந்து உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட திருவேதி (66) என்ற முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த மோகன ரங்கன் (42) என்பவரும் சிகிச்சை பலனின்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவர்களது உடல்கள் உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதே போல் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததாக பலர் தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தல்
மேலும், இது குறித்து தகவல் அறிந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் இது குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதார அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் குடித்த குடிநீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறுகையில், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் 6வது வார்டிலும், அதேபோல் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர் 13வது வார்டு பகுதிகளில் சுமார் 23 பேர் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததாக உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீர் காரணமல்ல
குடிநீரில் கழிவு நீர் கலந்து இருந்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கும்.. ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஏற்படவில்லை.. 23 நபர்களுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.. நாங்கள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் உடல் உபாதைக்கு குடிநீர் காரணமல்ல.. அவர்கள் சாப்பிட்ட உணவில் தான் பிரச்சினை இருப்பது போல தெரிகிறது. உடல் பாதைகள் ஏற்பட்ட சில நபரிடம் விசாரித்த போது மீன் சமைத்து சாப்பிட்டதாக தெரிவிக்கின்றனர்.. அவர்களுக்கு குடித்த குடிநீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. சில மணி நேரத்தில் முடிவு தெரிந்து விடும் என்றார்.
ஒருமையில் பேசிய அமைச்சர்
அப்போது செய்தியாளர்கள், '' ப்ளீச்சிங் பவுடரை மாநகராட்சிக்கு எத்தனை ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், அந்தந்த பகுதிக்கு எவ்வளவு விடவேண்டுமோ அவ்வளவு டெண்டர் விடப்பட்டிருக்கு என தரவின்றி பதில் அளித்தார். அப்போது செய்தியாளர்கள், 15 ரூபாய் ப்ளீச்சிங் பவுடரை 55 ரூபாய்க்கு விற்கப்படுவதாக குற்றசாட்டு உள்ளது என தெரிவித்தனர். அதனை மறுத்த அமைச்சர் ''பொது மக்களுக்கும் அக்கறை வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் வசிக்கும் மக்கள் குப்பைகளை ஆங்காங்கே கொட்டி வைத்திருக்கிறான்'' என ஒருமையில் பேசினார்.
அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், நீங்கள் சென்ற இடத்திலேயே கழிவுநீர் ஓடுகிறது. ஆனால் நீங்கள் மக்கள் மீது ஏன் குற்றஞ்சாட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், மக்கள் மீதும் தவறு உள்ளது மாநகராட்சி சார்பில் தூர் வாரும் பணிகளும் நடந்து வருகிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களையும், செய்தியாளரையும் ஒருமையில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் கூறுகையில், '' எப்பவும் எங்கள் பகுதியில் மாநகராட்சி குழாயில் தான் தண்ணீர் பிடித்து குடிப்போம். நேற்று குடித்த தண்ணீர் மிகவும் கலங்கலாக வந்தது. அதனை குடித்ததால், பலர் உடல் உபாதைகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களாகவே தண்ணீர் கலங்கலாகத்தான் எங்கள் பகுதியில் வருகிறது. இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கண்டோன்மெண்ட் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம், அவர்கள் வந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என குற்றம் சாட்டுகின்றனர்.