தென்காசி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்துகள் சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தென்காசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதிய பேருந்துகள், புதிய வழித்தடம் துவக்க விழா மற்றும் விபத்தின்றி பணியாற்றிய ஓட்டுநர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று (04.03.2024) நடைபெற்றது. இதில், 11 புதிய பேருந்துகள் சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.
இப்பேருந்துகள், தென்காசி மாவட்டத்திலிருந்து சங்கரன்கோவில், திசையன்விளை, திருச்செந்தூர், திருச்சி, கோயம்புத்தூர், ஸ்ரீவைகுண்டம், வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களுக்கு அனுப்பப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்திற்கு நற்பெயர் பெற்றுத் தந்த, தென்காசி பேருந்து நிலையத்தில் 25 ஆண்டுகள் விபத்து இல்லாமல் பணியாற்றிய இரண்டு ஓட்டுநர்களுக்கு தங்க நாணயம் மற்றும் 10 ஆண்டு காலம் விபத்தின்றி பாதுகாப்பாக பேருந்து இயக்கிய 43 ஓட்டுநர்களுக்கு வெள்ளி நாணயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன், திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், "கடந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் பக்தர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்வதற்கு, அதிக பேருந்துகள் இயக்கும் வண்ணம் தமிழக அரசு சார்பில், கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீப்பை மறைத்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா? - கரும்பு விவசாயி சின்னம் குறித்து நா.த.க காளியம்மாள் காட்டம்!