கும்பகோணம்: கும்பகோணம் மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், பிஎஸ் 6 (BS6) ரக 15 மாநகரப் பேருந்துகள் மற்றும் 8 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 23 பேருந்துகளின் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 23 புதிய பேருந்துகளை மாண்புமிகு அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் அவர்களுடன் மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்த போது.
— Sivasankar SS (@sivasankar1ss) July 25, 2024
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், கும்பகோணம் சட்டமன்ற சாக்கோட்டை அன்பழகன்,தஞ்சாவூர்… pic.twitter.com/NyQ6iXzutL
அப்போது, புதிய பேருந்தின் சேவைகளை அமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழக முதலமைச்சர் 7 ஆயிரத்து 200 புதிய பேருந்துகள் வாங்கவும், ஆயிரத்து 500 பழைய பேருந்துகளுக்கு புதிய கூண்டுகள் அமைத்து புதுப்பிக்கவும், 500 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கிடவும் உத்தரவிட்டிருந்தார்.
அந்த வகையில், இதுவரை 800 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும், முதற்கட்டமாக 100 புதிய மின்சார பேருந்துகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 30 பேருந்துகள் அடுத்த வாரம் இயக்கப்பட உள்ளது.
மகளிர் விடியல் பயணம் சிறப்பான முறையில் செயல்படுகிறது. அதற்காக 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்குவதால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மாதந்தோறும் 1ஆம் தேதி சம்பளம் பெற முடிகிறது. இந்த நிலை அண்டை மாநிலங்களில் கூட இல்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கும்பகோணத்தில் இருந்து நவக்கிரக ஸ்தலங்களுக்கு வார இறுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரம் முழுவதும் இயக்கப்படுகிறது. ஒரு ஏசி பேருந்து மற்றும் ஒரு ஏசி வசதி இல்லாத பேருந்து என நாள்தோறும் இச்சேவை செயல்பட்டு வருகிறது. இதேபோல், முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி நேரங்களில் அரசுப் பேருந்து சேவைகள் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் முதன்முதலாக டென்னிஸ் நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி.. எப்போது துவக்கம்?