சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, 17வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி முடிவடைந்தது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அன்றைய தினம் (ஜன.31) விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் முன்பாக, புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, 18-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி D.V.ஆனந்த் உத்தரவிட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (பிப்.07) முடிவடைவதால், புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (பிப்.07) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் காரணமாக, 19-வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கு; 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!