சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றும், இன்றும் (டிசம்பர் 9, 10) என இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. இரண்டாம் நாளாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பிய நிலையில் அதற்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலைவரும், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான பிச்சாண்டி, “திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான திட்டம் என்ன? இந்த ஆண்டும் 2,000 பேருக்கு மலையில் ஏற அனுமதி வழங்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “சமீபத்தில் ஏற்பட்ட பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும். திருவண்ணாமலையில் சங்க காலத்திலிருந்து தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது குறித்து, கிரிவல பாதையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபத்திருவிழா.. திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
மேலும் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆறு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மலையின் உச்சியில் கொப்பரை தீபம் ஏற்றுவது இன்றியமையாத நிகழ்வாகும். சான்றோர் காலத்திலிருந்து நடைபெற்று வரும் இந்த விழா தடைப்படக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 8 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூன்று நாட்களாக மலையை ஆய்வு செய்துள்ளனர். இவர்கள் கொடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, 350 கிலோ திரி கொண்ட கொப்பரைகள், 450 கிலோ நெய் உள்ளிட்ட தீபம் ஏற்றும் பொருள்களை அசம்பாவிதமின்றி மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும்” என்று அமைச்சர் உறுதி அளித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அதிகனமழை பெய்து வந்தது. இதில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு டிச.1ஆம் தேதி 7 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற நிகழ்வு, கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் மாதத்தில் நிகழ்ந்திருந்தது. இச்சம்பவம் பக்தர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரும் டிச.13 ஆம் தேதி நிச்சயம் திருவண்ணாமலையில் கொப்பரை தீபம் ஏற்றுப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருப்பது பக்தர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.