சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படையாக உள்ள நிலையில், சி.பி.ஐ விசாரணை எதற்கு என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவினர் வேண்டுமென்றே கேள்வி நேரத்தில பிரச்சினையை எழுப்பினார்கள் எனவும், மக்கள் மன்றத்தில் தோற்றுவிட்டோம், மக்கள் அதிமுகவை புறக்கணித்து விட்டார்கள் என்பதால் சட்டமன்றத்தில் எதாவது பிரச்சினையை கிளப்பவேண்டும் என அதிமுக இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்ட அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரு தவறு செய்திருந்தாலும், அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இது போன்ற செயல்களுக்கு திமுக ஒருபோதும் துணை போகாது என திட்டவட்டமாக கூறிய அவர், இதற்கு சி.பி.ஐ.டி (CBCID) விசாரனை தேவையில்லை எனவும் கூறினார்.
வெளிப்படையாக இருக்கிறோம்: சாத்தான்குளம் ஜெபராஜ், பென்னிக்ஸ் அடித்துக்கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் உண்மையை மறைத்தார். அதன் காரணத்தால் மட்டுமே திமுக அப்போது சி.பி.ஐ விசாரணை கோரியது எனக்கூறிய, அமைச்சர் ரகுபதி, தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு முற்றிலும் வெளிப்படை தன்மையுடன் விசாரணையை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.
இந்த சூழலில், சி.பி.ஐ விசாரணை தேவையில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரகுபதி, கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் எனவும் குறிப்பிட்டார். மேலும், கள்ளச்சாரயம் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், மெத்தனால் கலவையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். அது மட்டும் இன்றி, தமிழகத்தில் கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், உளவுத்துறை வழங்கும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து அதை அரசியல் ஆக்க முயற்சிக்கிறார்கள் எனவும், இதன் மூலம் அரசியல் ஆதாயத்தை தேடுகிறார்கள் எனவும் கூறினார். மேலும், கள்ளச்சாராய விவகாரத்திற்கும், திமுகவினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்ட அமைச்சர், அப்படி நிரூபித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். மேலும், தமிழகத்தில் தற்போதுவரை கள்ளுக்கடைகளை திறக்கும் நிலை ஏற்படவில்லை எனவும், அப்படி ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரகுபதி கூறினார்.