புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் மாவட்ட ஊரக நகரமைப்பு அலுவலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் இன்று (ஜூலை 11) திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்வதற்கு அதில் உள்ள சாதக பாதகங்களை எடுப்பதற்காக முதலமைச்சர் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
அந்த குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ஒரு நபர் ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்களை செய்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நான் ஒரு வேதாளம், பேயை ஓட்டுவது எனது கடமை என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், "அது வேதாளத்திற்கும் பேய்க்கும் உள்ள விவகாரம் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நாங்கள் மனிதர்கள்" என்றார். அதனைத் தொடர்ந்து பேசியவர், "சமுதாயத்தில் தவறான வார்த்தைகளை எல்லாம் அவர் பயன்படுத்தி பேசியுள்ளார். அதனால் தான் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நான் ஏற்கனவே கூறியிருந்தேன், தேர்தலுக்கு பின்பு அதிமுக ஆபத்தான சூழலை சந்திக்கப் போகிறது என்று. அது தற்போது நடந்து கொண்டுள்ளது. அவரது கொங்கு மண்டலத்தைச் சார்ந்த நிர்வாகிகளே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். அதே போன்று, டெல்டா மாவட்ட நிர்வாகிகளும் அவருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
உண்மையான இதை மறுப்பதற்கான வாய்ப்பு கிடையாது. அதிமுக தொண்டர்கள் நம்பி திமுகவிற்கு வரவேண்டும், நாங்கள் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம், மு.க.ஸ்டாலின் அதிமுக தொண்டர்களை அரவணைத்து நன்றாக வழிநடத்துவார். எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு முக்கியத்துவம் தந்து கொண்டு உள்ளார் என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டு உள்ளீர்கள்.
உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாருங்கள் என அழைக்கின்றேன். எங்களிடம் வாருங்கள், இன்னும் வலிமையாக மாறுவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகள் புறக்கணித்திருந்தாலும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாங்கள் கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறோம்.
ஆகையால், அந்த வாக்குகள் யாருக்கு விழுந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது தலைமறைவாகியுள்ளார். எங்கு அவர் இருந்தாலும் நிச்சயமாக காவல்துறையினர் அவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்! - Pudukkottai Encounter