சென்னை: அறிவியல் கண்டுபிடிப்பாளர் சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமர் விளைவு கோட்பாட்டை அறிவித்த நாளான பிப்.28ஆம் தேதி, தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், பிப்.28ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தமிழ்நாட்டில் உயர் கல்வி சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் கல்வியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
முன்பை விட, தற்பொழுது அறிவியலும் வளர்ந்துள்ளது. அறிவியலில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அறிவியலில் தன்னை வளர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை பதிவாளர் மேற்கொண்டு வருகிறார். வருமான வரித்துறைக்குத் தேவையான ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அரசும், பல்கலைக்கழகத்திற்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறது. சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி உயர் கல்வித்துறை செயலாளர் இரண்டு முறை கடிதம் அனுப்பியும், இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.
அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர், விடுப்பு எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் இல்லை. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணி நீக்கம் செய்யாத துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "உரிமம் இல்லாமல் பார்கள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை!