புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,128 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 82.76 கோடி மற்றும் 27 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு 13.4 கோடி என ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்’ மூலம் 10 நபர்களுக்கு இணை மானியமாக 51 லட்சம் என 96 கோடியே 71 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் அருணா, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுமென்றால் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம் மற்றபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. அதனால் தான் தொழில் முதலிட்டாளர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளி விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை இனிமேல் வேறு எந்த ஆசிரியர்களும் இதுபோல் தவறு செய்ய கூடாது என்ற என்பதற்காக எடுத்துகாட்டு நடவடிக்கையாகும். சிறைத்துறையின் உயர் அதிகாரிகளின் வீட்டிற்கு கைதிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளோம் அதையும் மீறி இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் இது தொடர்பாக சிறை கைதிகளிடம் புகார் புறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும். ஆளுநருக்கு யாரோ எழுதி கொடுத்து பேசுவதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆளுநர் சொந்தமாக எதையும் பேசுவதில்லை. இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்தரத்தில் முதலிடம் வகிக்கிறது. எனவே தமிழ்நாட்டில் கல்வி தரம் தாழ்ந்து விட்டதாக சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
வடமொழியின் ஆதிக்கத்தை திணிப்பதற்காக ஆளுநர் உள்ளிட்டோர் இது போன்ற உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். தொழில் முதலீட்டில் நாங்கள் அன்றாட விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடுகிறோம் , வெளிப்படைத் தன்மையோடு செயல்படுகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகம் தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
விஜயை கண்டு நாங்கள் அஞ்சவில்லை எங்களுக்கு பலமான போட்டி போடக்கூடிய கட்சி தேவை அப்போதுதான் நாங்கள் உற்சாகமாக தேர்தல் பணி ஆற்ற முடியும். திமுக மக்களை நம்பி இருக்கும் இயக்கம் எனவே திமுக யாரை கண்டும் அஞ்சாவது தேவையில்லை. மக்கள் நல திட்டங்களை செய்துவிட்டுதான் தேர்தலை சந்திக்க போகிறோம்” என்று பேட்டி அளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு தாவுகிறாரா அதிமுக முக்கிய பிரமுகர்? எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?