சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, "மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா" சூரிய சுடர் - 20 - கை வாழ்வை சலவை செய் என்ற தலைப்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், இன்று (பிப்.27) 300 சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கொசப்பேட்டையில் நடைபெற்றது. அதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”சுமார் 72 நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு, அதில் 20வது நிகழ்ச்சியாக, இன்று சலவைத் தொழிலாளர்கள் 300 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சோளிங்கர் திருக்கோயிலுக்கு அரசு நினைத்தால் கூட செய்ய முடியாத 12 கோடி ரூபாய் செலவில் சிறப்பான பணியினை செய்துள்ளார்கள்.
இதுவரை யாரும் செய்திடாத திருப்பணி இது. நாட்டில் முக்கியமான பணி ஒன்று மருத்துவம், நீரின்றி அமையாது உலகு நீர், அடுத்து கழிவுநீர் அகற்று வாரியம், அடுத்து உண்ண உணவு அடுத்தது, உடுத்த உடை. உடையை தூய்மையாக பயன்படுத்த இங்கு வந்துள்ள சலவைத் தொழிலாலர்கள் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இங்குள்ளவர்கள் பெரும்பான்மையானோர் கட்சிக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள், நீங்கள் வாழ்த்தினால் தலைவர் 100 ஆண்டு வாழ்வார்" எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் காந்தி, "இவ்விழாவில் கலந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. சிறப்பான முறையில் நலத்திட்ட உதவிகளை செய்பவர் அமைச்சர் சேகர்பாபு. 3 நாட்களுக்கு முன்னால் சோளிங்கர் கோயில்களில் காலை 6 மணிக்கு ஆய்வு மேற்கொள்ளலாம் என்றார். ஆனால், காலை 5.30 மணிக்கு என்னை வரவேற்க, எனக்கு முன்னால் சென்று விட்டார். இவையெல்லாம் ஈடுபாடு இருந்தால்தான் முடியும்.
ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் சொன்னது, இது திமுக ஆட்சியல்ல, மக்களாட்சி. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்குமான அரசு என்றார். அதற்கு ஏற்றார்போல் அமைச்சர் சேகர்பாபு பணி செய்து வருகிறார். பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.
மக்கள் கோரிக்கை வைக்காமலே, மக்களுக்கான திட்டங்களை சிந்தித்து செயல்படுத்துபவர் கருணாநிதி, ஆனால் கருணாநிதியை மிஞ்சும் அளவிற்கு மக்கள் பணியாற்றுகிறார், நம் முதலமைச்சர். மேலும், இன்று எவன் எவனோ அரசியலுக்கு வந்து விட்டு, வாய்க்கு வந்தவற்றை எல்லாம் பேசுகிறான். நீங்கள் சிந்திக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது என்ன? திமுக ஆட்சியில் 33 மாதங்களில் நடந்துள்ள பணிகள் குறித்து சிந்தித்து, தலைவர் காட்டுபவருக்கு வாக்களியுங்கள்" என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் போட்டியிடும் ராகுல் காந்தி! 2 தொகுதிகளை பட்டியலிட்ட மாநில காங்கிரஸ்