சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு அரங்கில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று பெரியார், அண்ணா, கருணாநிதி நிலைநிறுத்தியதை தற்போதைய மத்திய ஆட்சி கலைக்கப் பார்க்கிறது. இதில் முக்கியமாக கல்வி மாநிலங்களுடைய உரிமை. ஆனால், அதை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்று விட்டார்கள். தற்போதைய காலத்தில் மாணவர்கள் அரசியலமைப்பை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திய அரசியல் புரியும்.
சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது, சிலர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு சேர்க்க வேண்டும் என்றனர். ஆனால், அப்போதே அதை அம்பேத்கர் ஏற்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அருந்தியர்களுக்கான உள் ஒதுக்கீடு செல்லும் என்று தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி.
மேலும், அரசியல் மற்றும் நீதித்துறை புத்தகங்களை அனைவரும் அதிகளவில் படிக்க வேண்டும். இந்திய குடிமக்களாகிய நாம் அரசியலமைப்புச் சட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவற்றை பின்பற்ற வேண்டும். கருப்பர்கள், வெள்ளையர்கள் போராட்டம் வெளிநாடுகளில் இருந்தது. உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று சாதி ரீதியான போராட்டம் நம் நாட்டில் இருந்தது.
அனைத்தையும் ஒருங்கிணைந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே, சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒன்றிணைக்கும் நோக்கத்தால் தான் உருவானது, திராவிட இயக்கம். சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தற்போதைய தமிழக அரசு செய்து வருகிறது. மிக முக்கியமாக நாம் ஆண், பெண் வேற்றுமையால் வாய்ப்புகள் குறைபடக் கூடாது. அடிப்படையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும். அப்போது தான் சமத்துவமான சமூகம் உருவாகும்.
இன்று கருப்பர்கள் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிகிறது என்றால், அது தான் சமூக மாற்றம். உங்கள் பாட்டியிடம் ஏன் படிக்கவில்லை என்று கேட்டால் என்னை படிக்க வைக்கவில்லை நீயாவது படி என்பார்கள். உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, தரமும் உயர வேண்டும். படிக்கும் போதே பாடப் புத்தகத்தை மட்டுமல்ல பொதுஅறிவையும் படியுங்கள்.
ஆசிரியர்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன், உங்கள் மாணவர்களுக்கு என்ன படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளுக்காகவும் உங்கள் மாணவர்களை தயார்படுத்துங்கள். மாணவர்கள் தமிழக வரலாற்றை தெரிந்து கொள்ளவதுடன், பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும், அவசியமாக அரசமைப்புச் சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஐஐடியில் படிக்க தேர்வான தினக்கூலி தாயின் மகள்..! நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தாய்!