ஈரோடு: ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கள்ளுக்கடை திறப்பது குறித்து எதுவும் தற்போது சொல்ல முடியாது. இதுகுறித்து ஆய்வு செய்து பல துறைகளில் பேசி முடிவெடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் காவல்துறையினர் கடுமையாக இருப்பதால் தான் இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மதுக்கடைகள் குறைப்பது பற்றி தற்போது சொல்ல முடியாது. அதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. இந்த பழக்கத்தில் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
பள்ளி, கல்லூரி மாணவர்களில் சிலர் செய்யும் (போதைப்பொருள் பயன்படுத்துவது) குற்றத்திற்காக, பள்ளி கல்லூரி மாணவர்கள் என பொதுவாக கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது போன்று உள்ளது. அவர்களுக்கு அந்த எண்ணத்தைக் கொண்டு வருவதுபோல் உள்ளது. இந்த குற்றங்கள் படிப்படியாக முழுமையாக ஒழிக்கப்படும்.
செப்டம்பரில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு மதுவிலக்கு அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அண்ணாமலை கூறியதற்கு, அண்ணாமலை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பது முதலமைச்சர் உட்பட அனைவரின் நோக்கம். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்பது சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என தற்போது கூறுவதற்கு பதிலாக, கடந்த பத்து ஆண்டுகள் கிடைத்த போது மற்ற கட்சிகள் இணைந்து பூரண மதுவிலக்கு கொண்டு வந்திருக்கலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 63 விழுக்காடுக்கு மேலே வெற்றி எங்களுக்கு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு எம்பி பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Anna University registrar