ஈரோடு: அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் நிறுவப்பட்டு உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் மீதமுள்ள பத்து சதவித பணி முடிக்காமல் இருந்தது ஒப்பந்தக்காரர்களின் தவறு. மாவட்ட ஆட்சியர் தினமும் அந்தப் பணிகளை ஆய்வு செய்து வரும் நிலையில், இப்படி தெரிவிப்பது வருத்ததிற்கு உரிய விஷயம். அத்திக்கடவு - அவினாசி திட்டம் கமிஷனுக்காக முழுமையடையவில்லை என்று கே.சி. கருப்பண்ணன் தெரிவித்து இருப்பது அநியாயமான குற்றச்சாட்டு.
டாஸ்மாக் கடைகளில் அரசு விதித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை இன்று (பிப். 3) அனுப்பட்டு உள்ளது. மதுக்கடைகளை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. டி.ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் மதுக்கள் 44 விழுக்காடு பெறப்படுகிறது என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு தவறானது.
தேவையென்றால் அதற்கான பட்டியலை வெளியிடுவோம். நடிகர் விஜய் நிர்வாக சீர்கேடு இருப்பது குறித்து தெரிவித்து இருப்பது, அரசியலுக்கு வருபவர்கள் இதுபோன்று தெரிவிப்பது இயற்கை தான்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இதனிடையே மது பானங்களின் விலை உயர்வு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பிறகு பதிலளிக்கிறேன் எனக்கூறி அமைச்சர் முத்துச்சாமி பதிலளிக்காமல் கடந்து சென்றார்.
இதையும் படிங்க: "புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள்" - அமைச்சர் முத்துச்சாமி!