கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியில், ரூ.99.64 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை, அமைச்சர் முத்துசாமி இன்று (மார்ச் 5) துவக்கி வைக்கிறார். அதில் ஒரு நிகழ்ச்சியாக, சிங்காநல்லூர் பகுதியில் வார்டு எண் 57 மற்றும் 58-இல் தார்சாலை மற்றும் தங்கும் விடுதி அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் பல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், கோவை மாநகராட்சிக்கு என தனிக் கவனம் செலுத்தி பணம் ஒதுக்கீடு செய்து, அப்பணிகளை எல்லாம் வேகமாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, இன்று மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில், 1,178 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் முடியும்போது, பெருவாரியான பிரச்னைகள் முடியும். இதுமட்டுமின்றி, ரூ.40 கோடி ஒதுக்கீட்டில் ஆங்காங்கே குடிநீர் இணைப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
அதற்கிடையே, மாநகராட்சி ஆணையாளரும், மேயரும் பணிகளை தொடர்ந்து கண்காணிப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் இது போன்ற பணிகள் நடைபெற்றாலும், கோவையில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்துள்ள நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும்போது பல சிக்கல்கள் வருகிறது.
இருந்தாலும், மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது அத்தியாவசியம் என்ற காரணத்தால், அதையும் தாண்டி குடிநீர் வழங்கும் பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதைக் கொடுத்துவிட்டுப் பேசினால் மக்கள் நம்புவார்கள். அவர் இன்னும் அதை கொடுக்கவில்லை.
ஒரு பிரதமராக இருந்து கொண்டு, ஆளும் கட்சியை குற்றச்சாட்டு சொல்வது இதுவரை யாரும் பார்த்தது இல்லை. நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர். ஆனால், ஒரு மாநில கட்சியை, முதலமைச்சரை, ஒரு கட்சியின் தலைவரை இல்லாத குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பது என்பது அவ்வளவு நாகரிகமாக இல்லை. அவர் பிரதமராக இருப்பதால், இதற்கு மேல் நாங்கள் சொல்லுவதும் நாகரிகம் இல்லை.
அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு அதை பேசியிருக்கக் கூடாது. மோடி அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வருவது, தேர்தலில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதையெல்லாம், எதிர்நோக்கித்தான் திமுக உள்ளது. திமுகவினர் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த 3 ஆண்டுகளாக முதலமைச்சர் உழைத்து, பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதைத் தெரிவித்தால் மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்களே முடிவு எடுக்கட்டும்” என்றார்.
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு, “கோவையில் திமுக போட்டியிடுமா என்று கேட்கிறீர்கள், அதை நேரடியாகவே கேட்கலாமே, தோழமைக் கட்சிகளுடன், தலைமையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தோழமைக் கட்சித் தலைவர்கள், எங்கள் தலைவர்கள் பேசிய பின், எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.