ஈரோடு: ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கோடேபாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி கர்ப்பிணி துர்காவுக்கு(26) ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து 24ஆம் தேதி அதே மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தில் துர்கா மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் அதிக காய்ச்சல் காரணமாக மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு துர்கா சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தவறான குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை காரணமாகத் தனது மனைவி துர்கா உயிரிழந்ததாக அவரது கணவர் பன்னீர்செல்வம் பவானிசாகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில் கோவை அரசு மருத்துவமனையில் துர்காவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் தவறாக குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையால் உயிரிழந்ததாகவும், அலட்சியத்துடன் மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டு உயிரிழப்பு காரணமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் 27ம் தேதி புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் முன்பு சடலத்துடன் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களிடம் துர்காவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்படி சந்தேகம் அடைந்த பவானிசாகர் காவல் துறையினர் சந்தேகத்திற்குரிய மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தூர்காவின் குடும்பத்தினருக்கு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் சு.முத்துச்சாமி இன்று நேரில் சென்று திமுக சார்பில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, "குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை காரணமாகப் பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இளம்பெண்ணின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து நிதியுதவி மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் முழுமையான விசாரணை நடத்தி அதில் என்ன தவறு இருக்கிறதோ அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க உள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஏற்காடு மலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து: சிறுவன் உட்பட 4 பேர் பலி! - Yercaud Bus Accident