ஈரோடு: புதிய திராவிடக் கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் சமூக நீதி மாநில மாநாடு பெருந்துறை விஜயமங்கலம் சோதனை சாவடி அருகே நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "திராவிடம் என்றாலே அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பது பொருள். கலைஞர் மூலம் வேட்டுவ கவுண்டர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள். பிரிவுகளை ஓரம் கட்டிவிட்டு அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்" என்று பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர் பேசுகையில், "நாங்கள் எந்த சாதிக்கும் எதிரானவர்கள் இல்லை. தமிழகத்தில் பாஜக வராது. துரோகத்தின் உச்சம் தான் எடப்பாடி பழனிச்சாமி. தங்கமணி மற்றும் வேலுமணி போன்ற மணிகளை வைத்துக் கொள்ளையடித்தவர் எடப்பாடி பழனிசாமி.
மஞ்சள், கரும்பு விலைகள் உயர்வு போன்ற விவசாயிகளுக்கு எந்த உதவிகளும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, பாஜக காலில் விழுந்து அதிமுக கட்சியைக் கைப்பற்றினார். எடப்பாடி பழனிசாமி சாதி மாநாடு நடத்தப் பணம் கொடுத்து வருகிறார். சாதி சங்கங்களை ஊக்குவித்து அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தற்போது உள்ள அதிமுகவில், அவர்கள் சார்ந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் வாய்ப்பு தருகிறார்கள். நமது வரிப்பணத்தைக் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்த பணத்திலிருந்து தேர்தலுக்கு அதிமுக செலவு செய்கின்றனர். பெரியார் முதலமைச்சர் ஆகவில்லை. ஆனால், அவரை தவிர்த்துவிட்டு யாராலும் அரசியல் செய்ய முடியாது. அவரது தடிக்கு இன்றும் மரியாதை உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சாதியின் விதைகளை இங்கே விதைத்துக் குளிர்காய நினைப்பவர்கள் தான் பாஜக" - தூத்துக்குடி எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு!