கரூர்: காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுமார் ரூ.1.77 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை, மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவவதும் உள்ள மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும், மருத்துவக் கட்டடங்களை துரிதமாக கட்டித் தரும் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை, சுமார் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. கல்லூரிகள் தொடங்கியதற்கு பிறகு, அவற்றிற்கு நிதி ஆதாரங்கள் தந்து, ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 500, 600, 700 படுக்கைகள் கட்டி தரப்பட்டன. கிருஷ்ணகிரி, அரியலூர், விருதுநகர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.300 முதல் ரூ.400 கோடி வரை செலவிடப்பட்டுள்ளன.
இன்னும் நாகப்பட்டினம், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட வேண்டியுள்ளது. மருத்துவக் கல்லூரி திறப்பது மட்டுமே மருத்துவத் துறையின் வேலையல்ல. தமிழ்நாட்டில் உள்ள 74 மருத்துவக் கல்லூரிகளில், 37 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகும். கடந்த 2011ஆம் ஆண்டிலேயே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என அறிவித்தவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மற்றும் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, செங்கல்பட்டு (காஞ்சிபுரம்) , ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறார். தமிழக பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15 முறைக்கு அதிகமாக டெல்லி சென்று, மருத்துவத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை வைத்து வருகிறேன். திமுக ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை எனக் கூறும் அன்புமணி, இப்போது அவர்களுக்கு நெருக்கமான கட்சியாக இருக்கிறார். அவரும் கேட்டு பெற்று தந்தால் தாராளமாக வாங்கிக் கொள்வோம்.
மருத்துக் கல்லூரி தொடர்பாக தெரிவிக்கப்படும் புகார்களை, ஆதாரங்களுடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 545 தேசிய அளவிலான தர உறுதி நிர்ணைய திட்ட விருது (National Quality Assurance Standards Certificate - Award) தமிழக சுகாதாரத்துறை பெற்றுள்ளது. இது வேற எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை. இங்கு சுகாதார கட்டமைப்புகள் மிக வலுவாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. அதில், கரூர் மாவட்டம் மட்டும் 55 தேசிய தர உறுதி நிர்ணயத் திட்ட விருதுகளை பெற்றுள்ளது" என தெரிவித்தார்.
முன்னதாக, முப்பரிமாண கோணத்தில் உடல் உறுப்புகளில் ஏற்பட்டுள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக, 24 மணி நேரமும் கதிரியக்க மருத்துவர், சிடி ஸ்கேன் நிபுணர் வசதியுடன், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டிலான சிடி ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.தாமோதரன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மரு.ரமாமணி, துணை இயக்குனர் மரு.சந்தோஷ்குமார், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, மண்டலக் குழுத் தலைவர்கள் கோல்ட் ஸ்பாட் ராஜா, கனகராஜ், குளித்தலை நகர் மன்றத் தலைவர் சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.