சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெண்பாக்கம் வட்டம் கனிகிலுப்பை கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ரித்தீஷ் (9) என்ற மகனும் வகுப்பு காவியா ஸ்ரீ (6) என்ற மகளும் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரித்திஷ் நான்காம் வகுப்பும், காவியா ஸ்ரீ ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காவியா நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் பத்து ரூபாய் குளிர்பானம் பாட்டிலை வாங்கி வந்து குடித்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மூக்கிலும் வாயிலும் நுரை வந்து மயங்கியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் காவியாவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய சிறுமியின் தந்தை ராஜ்குமார் , “பத்து ரூபாய் மலிவு குளிர்பானம் வாங்கி குடித்ததாலேயே தன் மகள் இறந்ததாகவும், இதுபோன்று வேறு எந்த குழந்தைக்கும் நேராத வண்ணம் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தொற்று அல்லாத நோய்கள், அவசர சிகிச்சை குறித்த மாநாடில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “ திருவண்ணாமலை செய்யாறில் பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்தது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விலை குறைந்த குளிர்பனங்களாக இருந்தாலும் உணவுப் பொருட்களாக இருந்தாலும் அவற்றை கண்டுபிடித்து அவ்வபோது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அலுவலரிடம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல உணவுப்பொருட்களாக இருந்தாலும், குளிர்பானமாக இருந்தாலும் அதில் ஒரு மாதிரியை எடுத்து பகுப்பாய்வு செய்யும் நிலையமும், வாகனமும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, அது தர கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும், நச்சுத்தன்மை உள்ளிட்ட விஷயங்கள் அதில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "சிபிஎஸ்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் தமிழ் புத்தாக்கப் பயிற்சி"