சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா, இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 5 ஆயிரத்து 371 மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவத்தில் 1,485 மாணவர்கள், இந்திய மருத்துவத்தில் 2 ஆயிரத்து 55 மாணவர்கள், செவிலியர் மருந்தியல் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளில் 26 ஆயிரத்து 882 மாணவர்கள் என மொத்தம் 35 ஆயிரத்து 793 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பல்கலைக்கழக தேர்வுகளில் முதலிடம் பெற்று பதக்கம் பெற்றவர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஆளுநர் ஆர்என்ரவி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை நேரடியாக வழங்கியுள்ளார். இதில், 25 மாணவர்களுக்கு பி.எச்.டி பட்டம், பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 96 மாணவர்கள் என 142 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் ஆனந்த் 9 பதக்கங்களும், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சுர்கித் நந்தா 7 விருதுகளும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவை அமைசர் மா. சுப்பிரமணியன் புறக்கணித்துள்ளார். முன்னதாக, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், ஆளுநர் தலைமையிலான விழாக்களில் கலந்து கொள்வதில்லை” என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்!
பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி பேசியதாவது, “2024-25 கல்வியாண்டில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பில் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரி, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பாடப்பிரிவுகளில் இந்த கல்வியாண்டில் 722 இடங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் 380 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது”என்றார்.
இதனையடுத்து, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சண்டிகர் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விவேக் லால் பேசுகையில், “திறமையான மாணவர்கள் தென்னிந்தியாவில் இருந்து சண்டிகர் மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். நமது நாட்டின் மருத்துவர்கள் தான் உலகிலேயே சிறந்த மருத்துவர்கள்.
நமது நாட்டில் ஒரு நோயாளியை குணப்படுத்தினால், அந்த மருத்துவர் அவர்களின் குடும்ப உறுப்பினராகிவிடுகிறார். சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய சேவை உள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் சேவையும் நமது மருத்துவ கட்டமைப்பின் ஒரு அங்கம். நமது நாட்டில் தான் மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு கிடைக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 9 பதக்கங்கள் பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ஸ்ரீராம் கூறுகையில், “நான் ஸ்டான்லி மருத்துவமனையில் படித்து வருகிறேன். நீட் தேர்வில் 582 மதிப்பெண்கள் பெற்றேன். நான் தற்போது முதுகலை படிப்பு படித்து வருகிறேன். எனக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஆர்வம் உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்