சென்னை: சென்னை தீவுத்திடல் அருகே மத்திய அரசின் Council for Leather Exports India தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் பெருநகர சென்னை மாநகர காவல்துறை சார்பில், போதைப் பொருள் இல்லாத சமூகத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. 10, 5 மற்றும் 3 கிலோமீட்டர் என்று நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2023 முதல் கடந்த செபடம்பர் 15ஆம் தேதி வரையில், தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்து 6 ஆயிரத்து 157 குடோன்கள் மற்றும் வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்த 19 ஆயிரத்து 822 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 890 கிலோகிராம். தடை செய்யப்பட்ட பொருட்களின் தோராய மதிப்பு ரூ.10 கோடியே 87 லட்சத்து 91 ஆயிரத்து 708. தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்: ‘மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது போலவே மாற்றத்தை மிகச் சிறப்பாக அறிவித்துள்ளார். உதயநிதிக்கு எப்பொழுது துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல், திமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: "விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன்"- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இன்று ஒரு தலைமையகமாக மாற்றியிருக்கிறார்.
234 தொகுதிகளிலும் வெற்றி: நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி 234க்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 2 கோடி இளைஞர்களின் மிகப்பெரிய விழிப்புணர்வாக விளையாட்டுத்துறையை மிகச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சுற்றித்திரிந்து அரசின் திட்டங்களை மக்களுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்” என்றார்.
வாரிசு அரசியல்: தொடர்ந்து, வாரிசு அரசியல் என்று விமர்சிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "யாரு எல்லாம் வாரிசு அரசியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் பேசலாம். தங்களுக்கான வாரிசுகள் யார் எல்லாம் அரசியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் இதை முன்னெடுத்துப் பேசலாம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்