சென்னை: சென்னை வேளச்சேரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்து, வீடு வீடாக நடந்து சென்று மக்களை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை வழங்கினார். இந்தத் திட்டத்தின் சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,"1 கோடியே, 86 லட்சத்து 13 ஆயிரத்து, 872 பேர் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். 2 கோடி, பயனாளர்களை விரைவில் எட்டக்கூடிய வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு செல்வது சவாலாக உள்ளது. 53 லட்சத்து 5 ஆயிரத்து 383 பேருக்கு சென்னையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை கொண்டு செல்ல 104 என்கிற அவசர கால எண் இன்று முதல் அறிவித்துள்ளோம். அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் இந்த எண்ணிற்கு அழைத்தால் அவர்களுக்கு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் 3000க்கும் அதிகமான பணியாளர்கள் டெங்கு கண்காணிப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேளச்சேரி மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் தேங்காதிருக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "சமூகநீதி பற்றி பேசும் அரசு சர்வே எடுக்க தயங்குவது ஏன்?" - வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசை விளாசிய அன்புமணி! - Anbumani Ramadoss