திருச்சி: டெல்டா பகுதிக்கு பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி ராஜா மற்றும் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விதை நெல் மற்றும் பூக்களைத் தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது வழங்கப்படும் தண்ணீர் நடப்பில் உள்ள குறுவை சாகுபடிக்கும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், ஏரி, குளங்களில் நீர் நிரம்புவதற்கும் மற்றும் ஆடிப்பெருக்கை கொண்டாடுவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கல்லணையில் இருந்து காவிரி 1,500 கன அடி, வெண்ணாறு 1,000 கன அடி, கல்லணை கால்வாய் 500 கன அடி மற்றும் கொள்ளிடத்தில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், கூடுதலாக கிடைக்கவுள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும்.
தற்பொழுது திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பருவமழைக்கு ஏற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைக்கப்படும். மக்களுக்கு விவசாயப் பெருங்குடி தெரிவிப்பதுடன், நீரினை அன்புடன் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறை அலுவலர்களுடன் நீர் பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா சொல்வது போன்று எதுவும் நடக்காது. மேகதாது குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதேபோல, மத்திய அரசும் அதை அனுமதிக்க முடியாது என்று கூறியிருக்கிறது. கர்நாடகாவில் ஏதோ அரசியல் செய்வதற்காக தொடர்ச்சியாக இதை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், கடைமடைக்கு இன்னும் 5 நாட்களில் தண்ணீர் சென்றடையும். ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் செல்லும் வரை வண்டல் மண் எடுக்கலாம். அதற்கு எவ்வித தடையும் கிடையாது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்