திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குமரன் சாலையில் உள்ள மாநாட்டு அரங்கம், மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் நான்காம் குடிநீர் திட்டம் ஆகியவற்றை வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.11), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு துறைகளின் சார்பில், 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். இதற்கான மேடை மற்றும் அரங்கம் அமைக்கும் பணியானது, திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் இன்று (பிப்.09) நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக அரசு திறந்து வைப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இது அரசின் தொடர் பணி. திட்டம் யாரால் தொடங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணியை முழுமை அடையச் செய்தது திமுக அரசுதான்.
மேலும், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை அறிவித்ததோடு அதிமுக அரசு சென்றுவிட்டது. அதற்கு நில கையகப்படுத்துதல் முதல், நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்தியது வரை திமுக அரசுதான். அத்திக்கடவு - அவினாசி திட்டம் காலதாமதப்படுத்தப்படுவது இல்லை. சில இடங்களில் விவசாயிகள் வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சாமிநாதன், "அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் சில இடங்களில் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிமுக அரசு வழங்காமல் சென்றுவிட்டது. அதனை வழங்கி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் முழுமையாக திட்டம் செயல்பாட்டிற்கு வரும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை, விதிகளை மீறும் கம்பெனிகள்”.. அரசுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை!