சென்னை: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டத்துக்கு காரணம் என்ன?: கடந்த 1971ஆம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்பு கடந்த 2018ஆம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு உத்தரவுகளுக்கு எதிர்ப்புகள் எழுந்ததால், அதனை அப்போதைய ஆளும் கட்சி ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தான், இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 5ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டம் வெடிக்க தொடங்கியது.
படைவீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், அது தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று வங்கதேசத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடஒதுக்கீடு முறையினால் நியாயமற்ற முறையில் பலர் பலன் அடையக்கூடும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமானது, தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறி மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தில் சுமார் 15,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில் 8,500 பேர் மாணவர்கள் ஆவர்.
இந்நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய தூதரகத்தின் சார்பில் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், "வங்கதேசத்தில் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த 49 மாணவர்களை முதற்கட்டமாக இன்று அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வருவதற்கான பணியை அயலகத்துறை மேற்கொண்டு வருகிறது. கிருஷ்ணகிரி, கடலூர், தருமபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சென்னை, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 49 மாணவர்கள் வங்கதேசத்திலிருந்து இன்று தமிழகம் வருகின்றனர்.
மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பாதுகாப்பான இடம், உணவு ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழுமையான பட்டியல் கிடைத்த பிறகு அவர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளும் துவங்கும். தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து வருகிறோம் அயலகத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இந்திய தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்து வருகிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த வங்கதேசத்தில் வசிக்கும் மக்களிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. விசாரித்துக் கொண்டு வருகிறோம். மாணவர்கள் பதட்டமான சூழலில் பேசினார்கள். அவர்களிடமும் மற்ற மாணவர்களிடம் அயலகத்துறை உதவி செய்ய தயாராக இருப்பது தொடர்பான தகவல் கூறச் சொல்லி இருக்கிறோம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஆற்றில் மீட்கப்பட்ட செல்போன்கள்.. தடய அறிவியல் துறையினர் ஆய்வு! - Armstrong murder case