வேலூர்: காட்பாடி கல்புதூர் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, காட்பாடி அடுத்த கரசமங்கலம் என்ற இடத்தில் ரூ.29.14 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், துணை மேயர் சுனில் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அண்மையில் பிரதமர் மோடி, மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்நாடகா தயாராக இல்லை என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இந்நிலையில், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இரண்டு மாநிலங்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது தற்கொலைக்குச் சமம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, “மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில், நடுவர் மன்றத்திற்குச் சென்றோம். நேரடியாகவே பட்டேலும், கருணாநிதியும் பிரதமராக இருந்த தேவ கவுடாவை வைத்துக்கொண்டே 3 நாள்கள் பேசினோம் அப்போதும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால், முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன் பின்னே வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம். இப்போது தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் கர்நாடக அரசு ஒத்துழைக்காது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றால் இரண்டு வருடங்களுக்கு காலதாமதமாகும். அப்போது கர்நாடக அரசு பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும். அப்போது அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து அனுப்பிவிடும். பின்பு பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அழைக்காது. ஆகவே, பிரதமர் மோடி இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்குச் சமம்” இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கனிம வளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு குறித்து கேட்டதற்கு, அதற்கென்ன செய்வது என்று கூறினார். நீர்வளத்துறை கால்வாய்களை எல்லா இடங்களிலும் சீராக்கி ஒவ்வொரு ஏரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்