சென்னை: நடப்பாண்டுக்கான (2024 - 2025) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கியது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 29) நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மதுவிலக்கு சட்டம், 1937-ல் சட்டத் திருத்த மசோதா ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், அதனைத் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டம், 1937-ல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, 'கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிப்பதோடு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் முற்றிலும் மூடி பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்' எனப் பேசினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "பாண்டிச்சேரி, பெங்களூரு எனத் தமிழகத்தைச் சுற்றிலும் நெருப்பு வளையம் இருக்கும்போது 'கற்பூரம்' என்ன செய்யும் என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அன்றே கூறியிருந்தார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. இதனைத் தடுக்க ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு காவலர்களைப் பணியமர்த்தவா முடியும்? நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.
உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவைப்படுகிறது. அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் உள்ள மதுவில் கிக் இல்லை. அதனால், சிலர் கள்ளச்சாராயத்தை நாடிச் செல்கிறார்கள். விட்டில் பூச்சி எப்படி தானாகச் சென்று உயிர் இழக்கிறதோ. அதேபோல தெரிந்தே கள்ளச்சாராயத்தைக் குடித்தது உயிரிழக்கிறார்கள்" என்று கூறினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, "புதிய சட்டத் திருத்தத்தின் படி மூன்று மாதங்கள் இருந்த தண்டனை மூன்று ஆண்டுகளாக உயர்த்தி கடுமையாக்கப்பட்டுள்ளது. மெத்தனால் சப்ளை செய்தவர்கள் மட்டுமல்ல, குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அவசரத்திற்காக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்னும் தண்டனைகளைக் கடுமையாக்க என்னென்ன சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்பதைப் பரிந்துரை செய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அதுமட்டுமில்லாமல் முதலமைச்சர் அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் கொடுக்கும் பரிந்துரையையும் இந்த சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவையில் முதலமைச்சரின் முன்னிலையில், இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு தரப்பினர்களும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி காந்தி சந்தையில் உள்ள கடைகள் இடமாற்றமா? வியாபாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்!