வேலூர்: 18வது நாடாளுமன்றத் தேர்தலில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் காட்பாடியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்பொழுது பேசிய அமைச்சர் துரைமுருகன், "மக்களுக்காக எந்த திட்டத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து இருக்கிறார். மேலும் தன்னுடைய தொகுதி நிதியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுவார்" என்றார்.
அதனை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தவர், "துணை முதலமைச்சர் பதவியை கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள். இது எல்லாரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. கூட்டு முயற்சியால் எடுக்கப்பட வேண்டிய விஷயம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவது குறித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் கேட்டிருக்கிறோம். இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். இந்த வழக்கில், கர்நாடகா அரசு 2 அல்லது 3 தடவை பேசி பார்க்கிறோம் அவசரப்பட்டு நீங்கள் தீர்ப்பாயத்தை அமைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் அமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது நல்ல திட்டம் தான். ஆனால் பிடிவாதக்காரர்களோடு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பது முடியாத காரியம். இதுவரை கர்நாடக அரசுடன் 50 முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை மூலம் எந்த முடிவும் எட்டாது எனவேதான் தீர்ப்பாயத்தை அமைக்க கேட்டுள்ளோம்" என தெரிவித்தார். அதனை தொடர்ந்து, "முல்லைப் பெரியாறு அணையை நேற்று கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அதில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்களே என்ற கேள்விக்கு பதிலளித்தவர், " எல்லா அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் கசிவு ஏற்படத்தான் செய்யும். இது ஒரு பிரச்சினையே அல்ல" என்றார்.
அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஆய்வு செய்வது ஒரு நாடகம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு? அதிமுக கட்சிக்குள் நடப்பது தான் நாடகம் என்று பதிலளித்தார். மேலும், கனிமவள துறையில் கொள்ளடிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, "அதில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்