வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் கிராமம் முதல் பாலாறு இணையும் இடம் வரையுள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு மற்றும் சீரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.6.32 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நீர்வளத்துறை அமைச்சர் குத்துவிளக்கு ஏற்றி அதன் பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த பணியில் பாண்டியன் மடுவு கால்வாயில் காங்கேயநல்லூர் கிராமம் முதல் அம்முண்டி கிராமம் பாலாற்றில் இணையும் இடம் வரை, மொத்தம் 12.70 கி.மீ நீளத்திற்கு புல வரைபடத்தின்படி அகலப்படுத்தி தூர்வாரும் பணிகள், கால்வாயின் இருபுற கரையிலும் எல்லைக் கற்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் காங்கேயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், கார்ணாம்பட்டு, அம்முண்டி ஆகிய கிராமங்களில் பாண்டியன் மடுவு கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்துள்ள 5 கொண்டங்களை புனரமைக்கும் பணிகள் மற்றும் மொத்தம் 5 நேரடி பாசனக் கால்வாய்கள் 10.60 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த பணிகளின் மூலம், வெள்ள காலங்களில் வெள்ள நீர் கால்வாயில் தங்கு தடையின்றி செல்லவும், அருகிலிருக்கும் விளை நிலங்களுக்கு வெள்ளநீர் புகாமல் இருக்கவும், பாசன நீர் விளை நிலங்களுக்குச் சென்றடையவும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியினால் காங்கேயநல்லூர் கிராமம் முதல் அம்மூண்டி கிராமம் வரை கால்வாயின் இருபுறமும் 6 கிராமங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டவும், குடிநீர் வசதியும் மற்றும் 901.55 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெறும்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும் என நேற்று கே.வி.குப்பத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடை பயணத்தின்போது அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு? நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்” என்றார்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் எந்த கட்சியிலும் சேரலாம். அதில் என்ன இருக்கின்றது?” என பதிலளித்தார். பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு, “அவர் என்ன பெரிய எக்கனாமிஸ்டா..? பெரிய பெரிய வல்லுநர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையைக் கிளப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.