சென்னை: சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரை கடற்கரையில், திமுக தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி சார்பில் வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், திமுக மற்றும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "தமிழிசை சௌந்தரராஜனை சிறு வயதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர், அவரது தந்தை எனக்கு பழக்கமானவர். ஆனால் இப்போது அவர்கள் ஒரு கட்சியின் தலைவராகி, இரண்டு மாநிலத்தின் ஆளுநர் ஆகியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால், தற்போது பூமி திசை மாறிவிட்டது. அதனால் தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார்.
ஆளுநர் பதவியில் ஒரு வேலையும் இல்லை, அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட நிலைமை ஆகிவிட்டது. தென் சென்னை திமுகவிற்கு மட்டுமே உடையது. திமுகவின் கோட்டை அதற்கு ஆசைப்படலாமா? மோடி ஆட்சியை போ என்று சொல்வது நாங்கள் ஆட்சியில் அமர்வதற்கு இல்லை. இந்த நாடு பல்வேறு சாதி, மதம் உடையது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஜனநாயகம் இருந்தது, சட்டம் ஒழுங்கு இருந்தது. ஆனால் இவர்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே நாகரிகம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் எங்களுக்கு அது ஏற்படையது அல்ல, ஏனென்றால் இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. இது வட இந்தியனுக்கு தெரியாது. எனவே, இங்கு எந்த பருப்பும் வேகாது, மோடி திமுகவை அழிப்பேன் என்று சொல்கிறார். இதை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் படமாகிவிட்டனர் (இறந்துவிட்டார்கள்). சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களை ஏன் பிரிக்கிறீர்கள்?
நாட்டின் சுதந்திரத்திற்கு முதலில் போராடியவன் இஸ்லாமியர், அதுமட்டுமின்றி, நாம் தேசியக்கொடியை முதன் முதலில் வரைந்து செங்கோட்டையில் ஏற்றியதிற்கு முக்கிய காரணம் ஒரு இஸ்லாமியர். இந்த முறை பிஜேபி வரமாட்டார்கள் என்கிறேன், என்ன பந்தயம்? திமுகவைப் பார்த்து வாரிசு அரசியல் என்கின்றனர்.
வாரிசு என்றால் என்ன, ஆண்மை உடையவன் பிள்ளை பெற்று கொள்கிறான். வாரிசுகளுக்கு நாங்கள் பதவி கொடுக்கவில்லை. ஸ்டாலின் இளம் வயதில் இருந்தே 50 ஆண்டு காலம் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், சிறைகள், பொதுக்கூட்டங்கள் போன்று கட்சிக்குப் பணி செய்துள்ளார்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: சென்னை கேளிக்கை விடுதி விபத்து விவகாரம்; கேளிக்கை விடுதி மேலாளர் கைது - CHENNAI PUB CEILING FELL