வேலூர்: காட்பாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரிடம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறலுக்கு உட்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாபெரும் பதவியை அவர் வகித்துவருபவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருந்தவர். தேர்தல் கால சட்ட திட்டங்களை அறிந்தவர். அவரே சில நேரங்களில் தன்னிலை மறந்து எல்லைக் கோட்டை தாண்டி பேசி இருக்கிறார். பிரதமரின் பேச்சுக்கள் முக்கியத்துவம் பெரும் என்பதை மறந்து அவர் பேசுகிறார்.
நாளை (ஜூன் 1) கடைசி கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது அவர் செய்வது தேர்தல் விதிமுறை மீறல் போல இருக்கிறது. அதனால் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, இந்திய ஜனாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் அவரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் மீறி அவர் தியானத்திற்கு வந்து இருக்கிறார்" எனக் கூறினார்.
அதன் பின்னர், காந்தியின் வாழ்கைப் படம் வந்த பிறகே அவரைப் பற்றி உலகிற்கு தெரியும் என பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த மோடி இப்படியெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. குஜராத்தில் தான் காந்தி ஆசிரமம் உள்ளது.
அந்த ஆசிரமத்தையாவது பிரதமர் மோடி பார்த்து இருக்க மாட்டாரா? காந்தியைப் பற்றி அறிந்திருக்கமாட்டாரா? எங்கேயோ கடைக்கோடியில் குக்கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு கூட காந்தியை பற்றித் தெரியும். ஆனால், அவருடைய படம் வந்த பிறகுதான் அவரை பற்றி தெரியும் என்று சொல்வதைப் பார்க்கும்போது பாஜக காந்தியின் மீது எவ்வளவு வன்ம நெஞ்சம் கொண்டு இருக்கிறார் என்பது தெரிகிறது.
ஆளுநர் எங்களை ஒரு விழாவுக்கு அழைத்தார். அங்கு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகள் படம் காண்பிக்கப்பட்டது. ஆனால், அதில் காந்தியின் படமும், நேருவின் படத்தையும் மறந்து விட்டு சர்தார் வல்லபாய் பட்டேல் படம் காண்பிக்கப்பட்டது. இந்த நிலை நீடித்தான் இந்திய நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறி ஆகும்" எனக் கூறினார்.
தொடர்ந்து முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அறிக்கை தாக்கல் செய்தாலும், DPR தாக்கல் செய்தாலும் தமிழ்நாடு அரசிடம் கேட்காமல் ஒரு செங்கல்லை கூட எடுத்துவைக்க முடியாது, எடுத்துவைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாகத் தெரிவித்து இருக்கிறது.
ஆகவே, முல்லை பெரியாற்றிலோ மேகதாதுவிலோ அணையைக் கட்டவே முடியாது. அணையைக் கட்டியே தீருவோம் என்பதை போன்ற வீர வசனத்தையெல்லாம் நானே பேசி இருக்கிறேன். அரசின் ஒப்புதல் இன்றி ஒரு செங்கல்லை கூட எடுத்துவைக்க முடியாது" என அமைச்சர் துரைசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: காவி உடையில் பிரதமர் மோடி தியானம்! காலையில் சூரிய பகவான் தரிசனம்!