வேலூர்: அணைக்கட்டு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் திறப்பு விழா நேற்று (நவ.08) நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரியின் குறுக்கே ஆதனூர், குமாரபாளையம், புங்கனூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணிகள் நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர், “எடப்பாடி பழனிசாமி கொஞ்சம்கூட ஆதாரம் இல்லாமல் பேசியிருக்கிறார். அந்த திட்டம் அதிமுகவால் தொடங்கப்பட்டது. ஆனால், சரியாக ஆய்வு நடத்தாமல் தொடங்கப்பட்ட திட்டம் அது. இடத்தை தேர்வு செய்வதில்கூட தவறு செய்துள்ளனர். இதைப்பற்றி சட்டப்பேரவையில் அவர் பேசினால், உரிய பதில் அளிப்பேன்” என்றார்.
இதையும் படிங்க: கல்லூரி ஆசிரியர்களுக்கு இணையவழியில் இடமாறுதல் கவுன்சிலிங் - உயர் கல்வித்துறை அறிவிப்பு!
நீர்நிலைகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்த யோசனை இருக்கிறதா? என்ற கேள்விக்கு அப்படி எந்த திட்டமும் கிடையாது என்றார்.
மேலும், மேட்டூர் அணையில் தூர்வாரப்பட்டது போன்ற அணைக்கட்டில் தூர்வாரப்படுமா? என்ற கேள்விக்கு, “அணைகளில் எங்கும் தூர்வார முடியாது. எந்த நாட்டிலும் தூர்வாரி இருக்கிறார்களா? மேட்டூர் அல்லது வேறு எந்த அணையாக இருந்தாலும், அணைக்கு கீழே மணல் வருவதற்கு சரியான இடம் இருக்கும். அது வழியாக மணல் அடித்து வரப்பட்டு ஆற்றில் சேரும். தற்போது ஆற்று மணலைத் தான் எடுத்து வருகிறோம். அணையை யாரும் தூர்வார மாட்டார்கள்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்