வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119வது பிறந்தநாள் விழா இன்று (ஆக.25) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரது திருவுருவச் சிலைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, குடியாத்தம் எம்எல்ஏ அமலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் நந்தன் கால்வாய் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் திட்டத்திற்கு தனிக் கவனம் செலுத்தப்படும்.
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு தான் வருகிறது. நீர்வளத்துறையில் போதிய அளவில் பணியாளர்கள் இல்லை. இருப்பினும், தொடர்ந்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றிக் கொண்டுதான் வருகிறோம்.
மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசு அரசியலுக்காக பேசி வருகிறார்கள். அதனால் தான் நான் அந்த பிரச்னை பற்றி அதிகமாக பேசவில்லை. மேகதாது விவகாரத்தில் தமிழகமும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என்று தேவகவுடா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, காவிரி பிரச்னையில் தமிழகத்தின் மீது தேவகவுடாவுக்கு நல்லெண்ணம் கிடையாது என்றார்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து நடிகர் ரஜினி பேசியது குறித்த கேள்விக்கு, மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதினால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதை மறந்துட்டு ஏதோ ஒன்று ரஜினிகாந்த் பேசுகிறார்” என்று அமைச்சர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்