சென்னை: கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒவ்வொரு பள்ளியிலும் மாதந்தோறும் பெற்றோர், ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி நலன் ஊக்குவித்தல் போன்ற ஆலோசனைகளை வழங்க வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களை அங்கீகரிக்கவும், முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மழைக்காலம் வருவதால், அதனை கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எனது தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) August 22, 2024
" முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்களிடம் நல்லெண்ணத்தை வளர்க்கும் நோக்கில் ஆலோசனைகள் வழங்க… pic.twitter.com/PIQ1speHUf
ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெற்று செயல்பட பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடு முக்கியம். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மண்டல மாநாடு வரும் 31ஆம் தேதி திருநெல்வேலியில் பெற்றோரைக் கொண்டாடும் வகையில் நடத்த உள்ளோம். கடலூரில் இறுதி மாநாடு நடைபெறும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட வினா வங்கி புத்தகங்கள் அனைத்து நூலகங்களிலும் வைக்க ஏற்பாடு செய்யப்படும்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மொபைல் ஆப் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழகத்தின் மூலம் பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டும் போது ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் பொதுப்பணித்துறையின் அனுமதி பெற வேண்டும். இதனை மாற்றம் செய்யும் வகையில் பொதுப்பணித் துறையுடன் பேச உள்ளோம்.
கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து காவல்துறையிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மீண்டும் நடக்காத வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு 800 மருத்துவர்கள் ஒன்றியம் வாரியாக கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கவுன்சிலராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, கோவையில் போக்சோ சட்டத்தில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “போக்சோ சட்டம் இருந்தாலும், மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பள்ளி நிர்வாகம் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள். உடனடியாக எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பெற்றவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும்.
தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலத் துணைத்தலைவர் முத்துக்குமார், பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி, தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் உள்ளிட்ட பெற்றோர் ஆசிரியர் கழக்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வாகைப்பூவுக்கு அதிகரிக்கும் மவுசு.. விஜய்க்கு வெற்றி வாகை சூடுமா வாகைப்பூ? தவெக கொடியின் மூலம் தெரிவிப்பது என்ன?