திருச்சி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இடைநிலை பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை கண்டுகொள்ளவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றச்சாட்டியுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக, நலத்திட்ட விழா நேற்று (டிச.06) நடைபெற்றுள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு, 47 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது, “தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது BT Assistant 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துஅவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாக 3 ஆயிரம் பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: திருமாவோ, விஜயோ இளைஞர்களுக்கான புதிய அரசியலை உருவாக்க வேண்டும்- விசிக ஆதவ் அர்ஜுனா பேச்சு!
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மை. இந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எவரும் கண்டுகொள்ளவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது நாங்கள் அவர்களுக்கும் சேர்ந்து தேர்வு நடத்தியுள்ளோம். முதலமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில் பணி வழங்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், விசிக தூணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 2026 மன்னராட்சு ஒழிக்கப்பட்டும் என்று கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இத்தகைய கருத்திற்கு, விசிக தலைவர் திருமாவளவன் இரண்டு தலைவர்களும் பேசி தங்களுடைய கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். எனவே, இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.