சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (அக்.16) அதிதீவிர கனமழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 ஆம் தேதி ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் கனமழை.. தக்காளி விலை எகிறிடுச்சி! காய்கறி விலை கிடுகிடு உயர்வு.. கோயம்பேடு நிலவரம் என்ன..?
முன்னதாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிகள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ''கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால், கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களும், இளைஞர்களும் நீர் நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்